திங்கள், 15 ஆகஸ்ட், 2016

ஜாக்கிரதை நீதிபதிகள்

ஒரு சம்பவம் ஒன்று உள்ளது.

அதுவும் எனக்கு பிடித்த சம்பவம்,
எனக்கு பிடித்ததால் உங்களுக்கும் பிடிக்கும்
என நான் சொல்லவில்லை. மாறாக
அது சுமந்து வரும் உயிர் நிச்சயம்
உங்களுக்கும் பிடிக்கும்.


கதை இதுதான் ...

ஒருமுறை சாக்ரட்டீஸ்
ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது
ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி
ஏதோ கூற முயன்றார்.
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் ,

" என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால்
அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.
மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே
நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான்
அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? "
என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால்
யாராவது பயனடைவார்களா......???"
என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.

"யாருக்கும் பயனில்லாத,
நல்ல விஷயமுமில்லாத,
நேரடியாக நீங்கள் பார்க்காத,
என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை
தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்."


நம்மில் பெரும்பாலோர்கள் நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக நம்மை தவிர
பிறரை பற்றி பேசிக்கொண்டு தான்
இருக்கிறோம்.

அப்படி நாம் பேசும் விஷயங்கள் பெரும்பாலும்
நமது மேன்மையை நேரடியாகவும் மறைமுகமாகவும்
நிறுவிக்கொள்ள முயற்சித்துக்கொண்டே இருக்கிறது.

என்றாவது நாம் பிறரை பற்றி பேசியது போலவே
நிகழ்வுகள் நமது வாழ்விலும் வந்துவிட்டால்
துடிதுடித்துப் போகிறோம். எவைகளை எல்லாம்
நாம் நமது யோக்கியதையாக பறைசாற்றி

பெருமைகொண்டு பூரித்துப்போய் புளங்காகிதம்
அடைந்து இருந்தோமோ அவைகள் எல்லாம்
நம்மை விட்டு நகர்ந்து பிறரை பற்றி நாம்
பேசியவைகள் போலவே நம்மை பற்றி பிறர்
பேச விழையும் போது கண் விழித்துப் பார்க்கிறோம்.


ஆக

எங்கே தவறினோம்
எங்கே திசைமாறினோம்.
என்ன நடந்தது என
ஆழ்ந்து யோசிக்க தொடங்குகிறோம்.

உள்ளபடியே இப்படியான நிலை
நம்முடைய கடந்த கால தவறுகளையும்
நிகழ்கால படிப்பினைகளையும் எதிர்கால
பணிகளையும் பொறுப்புகளையும்
கற்றுதருவதாகவே உணர்கிறேன்.


இதை நான் பிறருக்கு எழுதவில்லை.
என்னை உட்படுத்தி என் வலிகளை உரசிப்பார்த்து
உணர்ந்து கொண்டு தான் சொல்கிறேன்.

எனவே

நீதிமன்றங்களை மூடி விடுங்கள்.
நீதிபதிகளுக்கு ஒய்வு கொடுங்கள்.

எல்லாவற்றையும் பல கோணங்களில் அணுகி
அலசிப்பார்க்க முயற்சியுங்கள்.

தீர்ப்புகள் தண்டனைகள் வேண்டாம்.
அனுசரணை அன்பு கொள்ளுங்கள்.


நீதிக்கு உலகம் இன்றும் என்றும் போற்றும்
கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்.

"தனது ஒரு கண் பிடுங்கப்பட்ட நிலையில்
இரத்தம் வடிய வடிய ஒருவன் நீதி கேட்டு வந்தாலும்
அவனது எதிரி வரும் வரை நீதி வழங்கி விடாதே

ஏனெனில் அவனது எதிரி ஒருவேளை
இரண்டு கண்களும் பிடுங்கப்பட்ட நிலையில் இருக்கலாம்"


நன்றி


அன்புடன்
அ மு அன்வர் சதாத்









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக