திங்கள், 20 ஆகஸ்ட், 2012

ஐரோப்பிய கடன் நெருக்கடி


எம்.எச்.எம். ஹனான்
B.com (Spcl), MAAT
CFA-CBSL


நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் உலகமயமாதலின் விளைவாகவும் இன்று எந்த ஒரு தனி நாடோ பிராந்தியமோ தனித்து
செயற்பட முடியாது. ஒன்றுடன் ஒன்று பிணைந்து காணப்படுகிறது.

ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் பிரச்சினைகள் ஏனைய பிராந்தியங்களையும் நாடுகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வெகுவாக பாதிக்கும்.

அந்த வகையில் தற்போது ஏற்பட்டு வரும் அறபு நாடுகளின் புரட்சிகளும் ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்சினையையும் உலகின் ஏனைய நாடுகளை படிப்படியாகவும் அபத்தமாகவும் பாதித்து வருகின்றன.

அந்த வகையில் ஐரோப்பாவின் கடன் நெருக்கடி எவ்வித விளைவுகளைத் தோற்றுவித்துள்ளன என்பதைப் பற்றி ஆராய்வதே இப்பத்தியின் நோக்கமாகும்.

அரச கடன் நெருக்கடி

எந்த ஒரு நாட்டில், அரசாங்கத்துக்கு தனது அரச இயந்திரத்தை இயக்குவதற்கான நிதியை உள்நாட்டிலோ, வெளிநாடுகளிலிருந்தோ பெறமுடியாத நிலை தோன்றுமாயின் அந்நாடு மிகுந்த நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும். அப்போது அது வரவு-செலவு திட்டத்தில் பாரிய பற்றாக்குறையை எதிர்கொள்வதோடு சர்வதேச அரங்கில்
கடன்களைப் பெற்ற நாடாக மாறும்.

இந்நிலை அப்படியே தொடருமாயின் அந்நாடுகள் கடன் நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும்.அப்போது அந்நாடுகளில் நிதி நிறுவனங்கள் சிதைவடையும், அரச கடன் (Teasury Billsand Bonds) அதிகரிக்கும், அரச கடன்களுக்காக வழங்கப்படும் வட்டி வீதமும் அதிகரிக்கும்.

இறுதியில் அந்நாட்டை வங்குரோத்து (Bankruptcy) நிலைக்கு இட்டுச் செல்லும். இத்தகைய ஒரு நிலையையே இன்று நாம் யூரோ வலய (Euro Zone) நாடுகளில் காண்கிறோம். இந்நிலை எமது தெற்காசிய நாடுகளுக்கும் விதிவிலக்கல்ல.

ஐரோப்பாவின் கடன் நெருக்கடியானது 2008ஆம் ஆண்டில் Iceland இன் வங்கி முறைமை சிதைவடைந்ததைத் தொடர்ந்து ஆரம்பமானது.

தொடர்ந்து கிரேக்கம், அயர்லாந்து, போர்துக்கல் ஆகிய நாடுகள் 2009 இல் பாதிக்கப்பட்டன.

தற்போது இதன் தாக்கத்தை இத்தாலி, பிரான்ஸ் போன்ற பெரிய நாடுகளும் அனுபவிக்கின்றன.

இப்பிரச்சினையானது முழு ஐரோப்பாவின் ஸ்திரத்தன்மையை பாதித்துள்ளதோடு, அந்நாடுகளின் பொருளாதாரம், மற்றும் வியாபாரம்
என்பன வற்றில் பலத்த அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் கடன் தொகை, வட்டி வீதம், பாதீட்டு பற்றாக்குறை
என்பன நிலமையை இன்னும் மோசமாக்கி வருகிறது.

இங்கு ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் (European Union) யூரோ வலய நாடுகள் (Euro zone) என இரு விடயங்கள் உள்ளன.

தற்போதைய கடன் நெருக்கடியானது யூரோ வலய நாடுகளிலேயே முக்கியமாக நிலைகொண்டுள்ளது.

ஆயினும்,அதன் பின்விளைவுகளை ஏனைய நாடுகளிலும்
காணக் கூடியதாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்
(European Union)

இது 27 அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கிய பொருளாதார, அரசியல் கூட்டிணைப்பாகும். இது1958 இல் ஐரோப்பிய பொருளாதார சமூகம் எனும் பெயரில் ஆறு நாடுகளால் உருவாக்கப்பட்டு,பின்னர் வளர்ச்சியடைந்து 1993 இலிருந்து தற்போதைய பெயரில் இயங்கி வருகிறது.

இன்னும் பல நாடுகள் இக்கூட்டிணைப்பில் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.இக்கூட்டிணைப்புக்காக, தனியான ஐரோப்பிய பாராளுமன்றம், மத்திய வங்கி, நீதிமன்றம் என்பன இயங்கி வருகின்றமை இதன் சிறப்பம்சங்களாகும்.

இக்கூட்டிணைப்பின் முக்கிய வளர்ச்சிப்படி யூரோ வலயம் ஆகும்.

யூரோ வலயம் (Euro Zone)

இது ஐராப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 17 நாடுகளின் தனி நாணயத்துக்கான (Single currency) கூட்டிணைப்பாகும். யூரோ நாணயத்தை (Euro) இந்த 17 நாடுகளும் தமது தேசிய நாணயமாக பயன்படுத்துகின்றன.

இக்கூட்டிணைப்பு 1999 இல் ஸ்தாபிக்கப்பட்டது. எனினும்,
யூரோ நாணயம்2002 இலிருந்து பாவனைக்கு வந்தது.
ஐரோப்பிய ஒன்றியம், யூரோ வலய நாடுகள் எனும் கருப்பொருள்கள் வெற்றிக்கதையாகக் கூறப்பட்டு வந்தாலும், இவற்றின் வெற்றி நிலை பற்றி பல ஆய்வாளர்கள் வித்தியாசமான கருத்துகளை கூறி வருகின்றனர்.

வளர்ந்து வரும் நாடுகளில் இவை பெரும் முன்மாதிரிகளாகப் பேசப்பட்டு வருகின்றன. ஆனால்,களநிலவரம் வேறுபட்டே காணப்படுகின்றது. ஐரோப்பாவின் பிரச்சினைகள் குமுறுகின்ற எரிமலைக்கு ஒத்ததாகும்.

அது எப்போதுதாவது வெடித்துச் சிதறும் என்பது எதிர்பார்க்கப்பட்டதாகும்.
தற்போதைய யூரோ வலய கடன் பிரச்சினையானது; பாரிய நெருக்கடியின் ஆரம்பமாகும். இந்நாடுகள் தம்மை கட்டியெழுப்ப பாரிய நிதி உதவிகளைக் கோரி வருகின்றன.

கிரேக்கம் (Greece)

2000 முதல் 2007 வரை கிரேக்க பொருளாதாரம் நன்றாக இருந்ததோடு வளர்ச்சியும் கண்டது.

எனினும், 2007 இல் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடி கிரேக்கத்தை நன்கு பாதித்தது. கிரேக்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% பங்களிப்பு செய்யும் தொழில்களான உல்லாச பிரயாணத்துறை மற்றும் கப்பல்துறை என்பன மொத்தமாக வீழ்ச்சியடைந்தது.

இது பாதீட்டில் பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்தப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய அதனது அரசாங்கம் பிழையான பொருளாதார தகவல்களை வெளியிட்டு கூடிய வட்டியில் வெளிநாட்டு கடன்களைப் பெற்று அரசாட்சி நடத்தியது.

அது மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் உண்மையை மறைத்து போலியான மத்திய வங்கி அறிக்கைகளை வழங்கியது.

2009 இன் அரச தகவல்கள் அதனது பாதீட்டு பற்றாக்குறை 6% வீதம் என காட்டியது. ஆனால்,உண்மை நிலை அதனது வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை 13.6% வீதமாகும். விளைவு கடன் தொகை ரொக்கட் வேகத்தில் அதிகரித்தது.

1999 இல் 122.3 பில்லியன் யூரோக்களாக இருந்த கடன் தொகை, 2010 இல் 355 பில்லியன் யூரோக்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. வேறுவார்த்தையில் கூறுவதாயின்,

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 94% மாக இருந்த கடன் தொகை
தற்போது 162 வீதமாக அதிகரித்துள்ளது.

விளைவு அந்நாட்டில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. சமூக நல செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் மீது அதிக வரிச்சுமை திணிக்கப்பட்டுள்ளது. இன்று மக்கள்
வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

அயர்லாந்து

இங்கு பிரச்சினை அரச செலவினங்களால் ஏற்பட்டதல்ல.
மாறாக வங்கித் துறையில் ஏற்பட்ட ஊழல்களால் உருவானதாகும்.

இது சம்பந்தமாக அந்நாட்டின் முக்கிய வர்த்தக புள்ளிகள் 10 பேர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

போர்த்துக்கல்

இங்கு முறைகேடான அரச முகாமைத்துவம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. வினைத்திறனற்ற அரச நிறுவனங்கள், அரசியல் காரணங்களுக்காக தொழில்வாய்ப்புகள், தேவைக்கதிகமான ஊழியர்கள், ஊழல்கள் என்பனவே முக்கிய காரணங்களாகும்.

விளைவு அரச கடன் வகை தொகையின்றி அதிகரிக்கப்பட்டன.

இந்த வரிசையில் இத்தாலி, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்பெய்ன் என்பன இவ்வாண்டில் வெகுவாக பாதிக்கப்பட்ட நாடுகளாகும்.

குறிப்பாக, இத்தாலி பற்றி அறிவது அவசியமாகும்.
இத்தாலியின் மொத்த அரச கடன்கள் 1,900 பில்லியன் யூரோக்கள் ஆகும்.

இதனைக் காப்பாற்ற மொத்த ஐரோப்பாவும் இணைந்தாலும்
முடியாதுபோகும் அளவுக்கு பிரச்சினை முற்றியுள்ளது.

இப்பிரச்சினையிலிருந்து மீள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் 2010 இல் ஐரோப்பாவின் நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக நிதியம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. அதன் மொத்த தொகை750 பில்லியன் யூரோக்கள் ஆகும்.

- இதில் கிரேக்கத்துக்கு 110 பில்லியன் யூரோக்கள்
- அயலர்லாந்துக்கு 85 பில்லியன் யூரோக்கள்
- போர்த்துக்கலுக்கு 78 பில்லியன் யூரோக்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இத்தாலிக்கு 440 பில்லியன்களே வழங்க முடியுமாக உள்ளது. இதனால், அதனது மொத்த கடன் தொகையில் 23% ஐ தான் ஈடுசெய்ய முடியும். அவ்வாறு வழங்குவது ‘யானைப் பசிக்கு சோழப் பொரி போட்டது’ போன்றாகிவிடும்.

இந்நிலையில் இந்நெருக்கடியானது ஏனைய ஐரோப்பிய நாடுகளையும்
பாதிக்க ஆரம்பித்துள்ளது. ஐஸ்லாந்து, ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து என்பன இந்த பட்டியலில் தற்போது இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி என்பன தமது பொருளாதாரங்கள் மேலும் பின்னடைவு காணும் என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளன.

பிரச்சினையின் எதிரொலியாக...

பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நீங்க வேண்டும்
எனப் பலர் விவாதிக்கின்றனர்.

ü யூரோ வலயம் மற்றும் ஒற்றை நாணயம் என்பன கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

ü சில நாடுகள் யூரோ வலயத்திலிருந்து நீக்கப்படலாம் அல்லது
பிரிந்து செல்லலாம்.

ü ஐரோப்பாவின் மொத்த பொருளாதாரம் வீழ்ச்சி காணும்.

ü உலகின் ஏனைய நாடுகளிலும் பொருளாதார பாதிப்புகளை
இவை கொண்டுவரும்.

இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் ஏற்றுமதிகளில் பாரிய பாதிப்பை இது ஏற்படுத்தும்.

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 38% மானவை ஐரோப்பிய நாடுகளுக்கே செல்கின்றன என்பது இங்கு குறிப் பிடத்தக்கது.

காரணங்கள்

இப்படியான நிலைமைக்கு மிக அடிப்படைக் காரணம் நவீன சுரண்டல் பொருளாதார முறைமைகளே.

முதலாளித்துவம் மேற்கத்தேய வீதிகளில் தோற்றுப் போயுள்ளன.
மக்கள் மாற்றுத் தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர்.

இரண்டாவது காரணம்;

தூய்மையற்ற அரசியல்வாதிகளும், அவர்களுக்குத் துதிபாடும் பொருளியலாளர்களும் கூட்டிணைந்து போலி அறிக்கைகளை
வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றமை.

மக்களின் செல்வங்களை கொள்ளையிடுவதற்காக உளகளாவிய
முதலீட்டு முதலைகளின் கூட்டிணைப்புகள்.

ஐரோப்பிய அனுபவத்திலிருந்து நாம் வாழும் தெற்காசிய நாடுகள் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, எமது நாடுகளின்

அரச கடன்கள்
அரச செலவினங்கள்
அரச நிருவாகம்
நாடுகளிலுள்ள ஊழல்கள்
கண்துடைப்புக்கான மத்திய வங்கி அறிக்கைகள்

இவை பற்றி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கவனம் செலுத்த வேண்டும். இவை ஒரு நாட்டின் தோல்விக்கு இட்டுச் செல்லும்.

இறுதியாக இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் ஐரோப்பாவின் பழமை வாய்ந்த முஸ்லிம் நாடான துருக்கி பொருளாதாரரீதியாக மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

இன்று ஐரோப்பாவின் சக்திமிக்க நாடாக அது காணப்படுகிறது.
எனினும், ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் பாலமாக உள்ள துருக்கி பல தசாப்த காலமாக முயற்சி செய்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

பல ஐரோப்பிய நாடுகள் மறுத்தே வந்துள்ளன.

தற்போது துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக்கொள்ள எதிர்ப்புத் தெரிவித்த நாடுகள் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன.

19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் நோயாளி என துருக்கியை வர்ணித்த, வஞ்சித்த ஐரோப்பா இன்று 21 ஆம் நூற்றாண்டில்
ஐரோப்பாவின் காப்பாளனாக துருக்கியை நோக்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக