அந்தவகையில் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கான சிறந்த மூல உபாய திட்டமிடல் குறித்து சிந்திக்கத் தலைப்பட வேண்டும். உடனடியாக நம்மால் அவ்வாறான ஒரு திட்டத்தை வரைய முடியாவிட்டாலும் கூட, முதல் கட்டமாக அதனை குறைந்தபட்சம் ஒரு பேசுபொருளாகவேனும் மாற்ற வேண்டும்.
எல்லா மாற்றத்திற்குமான முதல்படி, அது பற்றிய விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்துவதுதான். அந்தவகையில் சமீபகாலமாக இந்த விடயம் தொடர்பாக ஓரளவு கவனம் செலுத்தப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
திட்டமிடல் கலாச்சாரம் எம்மிடையே நன்கு வலுப்பெறவில்லை. முஸ்லிம் பாடசாலைகள் கூட இப்பொழுதுதான் ஓரளவுக்கு திட்டமிடல் பற்றி சிந்திக்கின்றன; சில ஆரம்ப எட்டுகளை வைத்துள்ளன.
எமது பெரும்பாலான சமூக நிறுவனங்களுக்கு முறையான திட்டங்கள் எதுவுமில்லை. அவற்றுள் சிறுகுழு அல்லது தனிமனித ஆதிக்கமே நிலவி வருகிறது. இந்த நிலையை கூடிய விரைவில் இல்லாதொழிக்க வேண்டும். எல்லோரும் ஒன்றுபடும் குறைந்தபட்ச பொதுப் புரிதலின் அடிப்படையிலான திட்டங்கள் வரையப்பட வேண்டும். இதுதான் நாம் முன்னேறுவதற்கான வழி.
இலங்கையின் மிகப் பின்தங்கிய சமூகங்களுள் ஒன்றான மலையகத் தமிழர்களது கல்வி தொடர்பான ஒரு வேலைத் திட்டம் 10 வீடுகளுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குதல் என்பதாகும். எவ்வளவு சிறிய - ஆனால் மிகத் தெளிவான - இலக்கு இது. எமது சமூகத்திடம் இதுபோன்ற திட்டங்கள் உள்ளனவா என்று கேட்டால் அதற்கான பதில் எம்மிடமில்லை.
முஸ்லிம் சமூகத்தை பல முனைகளில் வலுவூட்ட வேண்டியுள்ளது. அந்தவகையில்தான் எமது சமூகத்தின் மூல உபாய இலக்கு குறித்து நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது. நமது சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக பலரும் மணித்தியாலக் கணக்கில் பேசுவதை நேர்ப்பேச்சிலும் கூட்டங்களிலும் அடிக்கடி கண்டும் கேட்டும் வருகிறோம். ஆனால், பிரச்சினைகளைப் பேசும் அளவுக்கு தீர்வுகளை நோக்கி நாம் போவதில்லை.
இது ஏன்? எமது சமூகத்தினரிடையே நேர்-மைய சிந்தனைப் பாங்கை விட, எதிர்மறையான சிந்தனைப் போக்கே ஆதிக்கம் செலுத்துகிறது. எம்மில் பலருக்கு எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் அறவே அல்லது போதிய தெளிவுகள் இல்லை.
இந்த நிலையை மாற்றியமைப்பதற்கான முயற்சியை நாம் இப்போதிருந்தே தொடங்க வேண்டும். ஏற்கனவே, நாம் இந்த விடயத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். எம்மைச் சூழவுள்ள சமூகங்களும் அதிகார மையங்களும் இந்த விடயத்தில் எவ்வளவோ தூரத்திற்கு முன்னே சென்று விட்டன.
பின்தங்கிய சமூகமாக நாம் இனியும் இருப்பதா? நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமிடலால் பலப்படுத்தப்பட்ட, விளைவுகளால் பயன்பெற்ற சமூகமாக நமது சமூகத்தை மாற்றுவதற்கான பணியை இந்தக் கணத்திலிருந்தே தொடங்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக